Thursday 28 July 2016

'சதுர்த்தி'

ஆவணி மாதம் வரும் 'சதுர்த்தி' திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக ஆனை முகனை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு கணபதியைக் கொண்டாடினால், பெருகும் பொன்னை அள்ளி அவர் பெருமையுடன் நமக்களிப்பார். 

எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். 'பிள்ளையார் சுழி' போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவே, தான் 'மூல கணபதி' என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம். 

கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை 'கணபதி' என்று சொல்கின்றோம். எனவே, நாம் 'தேவ' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'மனித' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'அசுர' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும். 

 பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எங்கே எதில் கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் காட்சி தருபவர் பிள்ளையார். 

மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். சாணத்திலும் காட்சி கொடுப்பார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால், இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். 

துன்பங்கள் தூர விலகி ஓடும். 'சதுரம்' என்றால் நான்கு பக்கங்களும் பூர்த்தியாகிய அமைப்பாகும். எனவே, வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக, நாம் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். 

அன்றைய தினம் அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல் பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப் பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். அவருக்கு பிடித்த இலை அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. அவருக்கு பிடித்த மலர்கள் தும்பைப் பூ மல்லிகைப் பூ, செண்பகப்பூ, செம்பருத்திப் பூ, எருக்கம் பூ ஆகியவையாகும். 

அவருக்கு முன்னால் தோப்புக் கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொள்வது வழக்கம். 'தோர்பிகர்ணம்' என்பதே 'தோப்புக் கரணம்' ஆயிற்று. 'தோர்பி' என்றால் கைகளினால் என்று பொருள். 'கர்ணம்' என்றால் 'காது' என்று பொருள். கைகளினால் காதைப் பிடித்துக் கொள்ளுதல் என்பது இதன் முழுப் பொருளாகும். 

கஜமுகாசூரன் என்ற அரசனுக்கு முன்னால் தேவர்கள் பயத்துடன் தலையில் குட்டிக் கொண்டனர். அந்த அசுரனை விநாயகர் அழித்தார். எனவே, விநாயகர் முன்பும் தேவர்கள் பக்தியுடன் அதே தோப்பு கரணத்தைப் போட்டனர். அந்த பழக்கமே இப்பொழுதும் நடைமுறைக்கு வந்ததாக சொல்வர். 

விநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையாகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்த திதியாகும். அவருக்கு படைக்கும் ஒவ்வொரு பொருளிலும் அர்த்தம் இருக்கிறது. மோதகம் படைப்பதன் காரணம், மோதும் அகங்கள் (மனங்கள்) இருக்கக் கூடாது. 

எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தித் தான் மோதகத்தைப் படைக்கிறோம். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமலிருக்க மோதக நிவேதனம் செய்ய வேண்டும். துன்பங்கள் சிதறி ஓட சிதறுகாய் உடைக்க வேண்டும். 

கொய்யாப் பழம் என்றாலும், அது மரத்திலிருந்து கொய்த பழம் தான். விளாம் பழம் என்றாலும் அது விழுந்த பழம் தான். கடினமான ஓட்டிற்குள் இனிய கனியிருக்கும். கடினமான உழைப்பிற்கு பிறகு கனிவான வாழ்க்கை இருப்பதை இது எடுத்துக் காட்டுகிறது. 

'அவல்' குசேலனை குபேரனாக்கிய பொருள். எனவே, அவல் பொரி கடலையை ஆனைமுகனுக்கு அர்ப்பணித்து கணபதி கவசம் பாடினால், மனம் மகிழும் வாழ்க்கை கிட்டும். மக்கள் போற்றும் செல்வாக்கும் வந்து சேரும். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த் தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர்களுக்கு அருள் கொடுப்பவர் ஆனைமுகப் பெருமானாகும். 

சனி அவரைப் பிடிக்க வரும் பொழுது, 'இன்று போய் நாளை வா' என்று எழுதி வைக்க சொல்லி தந்திரத்தைக் கையாண்ட தலைவன் விநாயகனாகும். அப்படிப்பட்ட விநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் விரமிருந்து அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கட்பேறு கிட்டும். காரிய வெற்றி உண்டாகும். 

புத்தி கூர்மை ஏற்படும். நல்ல வாழ்க்கை அமையும். எள்ளுருண்டையை நிவேதனம் செய்தால் சனி பகவானின் பாதிப்பிலிருந்து விடுபட இயலும். தோப்புக்கரணம் போடுவதால் மூட்டுகால் வலிமை பெற்று ஆரோக்யத்தை வழங்கும். 

எனவே தான் 'வேழ முகத்து' விநாயகரைத் தொழ வாழ்வு மிகுந்து வரும் என்றும், 'வெற்றி முகத்து' வேழவனைத் தொழ புத்தி மிகுந்து வரும்... என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். கனவுகளை நனவாக்கும் கற்பகமூர்த்தி சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் வீற்றிருக்கிறார்.

சிவலிங்கத்தின் கதை

உலகிலுள்ள வழிபடு தெய்வ உருவங்களிலேயே விசித்திரமானதும் தனித்துவமானதும் ஆகியது சிவலிங்கமே. இதனுடைய கதை என்ன? இந்து மதத்தைக் கட்டி ஆள்பவர்கள் பார்ப்பனராக இருப்பதால், அவர்களால் உருவாக்கப் பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், உலகின் மூத்த, தமிழரின் நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகத்தில் இடம் பெற்றுள்ளதாலும், அதற்கப்பால் வெகு காலத்திற்கு பின்தான் ஆரியர்கள் சிந்துவெளிப்பகுதிக்கு வந்தனரென்பதாலும் இது பழந்தமிழரின் வழிபடுபொருள் என்பது புலனாகும்.
Sivalingamயார் படைத்தனர் என்பதோடு எதற்காக படைக்கப்பட்டது என்பதும் ஆய்வுக்குரிய பொருள். இதைப்பற்றி திரு. மஞ்சை வசந்தன் அவர்கள் 'தமிழா நீ ஓர் இந்துவா?' என்ற நூலில் சிறப்பானதொரு வாதத்தை முன்வைத்திருக்கிறார். உலகின் இனங்களிலேயே தமிழினம் தான் இயற்கையை நேசித்து இயற்கையையே மிகுதியாக வழிபடுபொருளாக கொண்டு வாழ்ந்த இனம். தன்னை வாழ்விக்கும் மழையை தெய்வமாக்கி மாரியம்மை என்று இன்றும் வழிபட்டு வருகின்றது. ஒளியால் இவ்வுலகத்தை உய்விக்கும் ஞாயிற்றை ஒவ்வொரு வருடமுகிழ்விலும் தை 1ல் நன்றியோடு வணங்குகிறது. உழவுக்கு உதவிடும் ஆடு, மாடுகளையும் நன்றியறிதலோடு மாட்டுப்பொங்கலன்று வழிபடுகிறது. தான் பயன்படுத்தும் கருவிகளைக்கூட ஆயுத பூசையன்று நன்றியோடு நினைவு கூறுகின்றது. இந்த தமிழர் பண்பாட்டைத்தான் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்கள் 'வளமை வழிபாடு' என்று அழைக்கின்றார். (காண்க: தமிழரின் அடையாளங்கள், பாலம் பதிப்பகம்.) ஆக, தனக்கு பயன்படும் கருவிகளைக்கூட நன்றியறிதலோடு போற்றும் மாண்புதான் தமிழரின் மாண்பு. நன்றியுள்ளவன் தான் தமிழன்.

இந்த முறையில் தான், தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ள உதவிய இனப்பெருக்க உறுப்புகளை வணங்கும் வழக்கத்தை உண்டாக்கினான். இது தமிழரின் வளமை வழிபாட்டின் ஒரு கூறுதான்.

மேற்கூறிய, மஞ்சை வசந்தன் அவர்களின் கருத்தே உறுதியானது என்பதை அடுத்து வரும் வரிகளில் நிறுவுவோம். உலகில் நம்மையொத்த மனிதன் தோன்றியபின், அவன் முதன்முதலில் வாழ்விடமாக தேர்ந்தெடுத்த இடம் மலைகள் தாம். ஏனெனில், அங்குதான் அவனுக்கு இயற்கையான வாழ்விடங்களாகிய குகைகள் கிடைக்கப்பெற்றன. அதோடு, தான் வேட்டையாடும் மிருகங்களை மேலிருந்து நோட்டமிடவும், தன்னை வேட்டையாடும் மிருகங்களிலிருந்து தப்பிக்கவும் மலைகளே இயற்கையான அரண்களாக அமைந்தன. இந்த கருத்து உலக அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப் பட்டதும், பாவானரால் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டதுமான கருத்து. (காண்க: தமிழர் வரலாறு,, தேவநேயப்பாவாணர்).

ஆக, உலகின் முதல் மாந்தன் வாழந்த இடம் மலைகளே. இயல்பாகவே, இம்மக்கள் எண்ணிக்கையில் மிகக்குறைவாகவே இருந்தனர். ஆனால், இவர்களின் வாழ்வு ஒவ்வொரு நாளும் பெருத்த அச்சுறுத்தலுக்கிடையே தான் நிகழ்ந்து கொண்டிருந்தது. கொடிய மிருகங்கள், நச்சுப்பூச்சிகள், வகைவகையான பாம்புகள், இயற்கை சீற்றங்கள், நோய்களென்று இத்தனையும் அவர்களின் எண்ணிக்கையை பதம்பார்த்துக் கொண்டிருந்தன. மட்டுமில்லாமல், குறைப்பிரசவம், பிரசவத்தில் தாய், சேய் இழப்பு என்ற வகையிலும் அவனுக்கு சோதனைகள். குழந்தை பிறப்பு கூட எத்தகைய சிக்கலானது என்பதும் ஒவ்வொரு முறையும் தாயோ, சேயோ அல்லது இருவருமோ பிழைப்பது அரிது என்பதால் தான் கருவுற்றவளுக்கு ஐந்து, ஏழு மேலும் ஒன்பது மாதங்களில் வளைகாப்பு (குழந்தை பிறப்பின் சிக்கல்களிலிருந்து காக்கும் வளை(யல்)) நிகழ்த்துகின்றனர்.

இத்துணை இடர்களுக்கு இடையே வாழ்ந்த அவர்களுக்கு தங்களின் இனப்பெருக்க தேவை எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை எளிதே ஊகித்தறியலாம். மிருகங்களிடமிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள ஆட்பலம் தேவையல்லவா? இந்த நிலையில் தான் தன்னுடைய இருப்பிற்கே அடித்தளமான இனப்பெருக்க உறுப்புகளை நன்றியோடும், மரியாதையோடும் பார்த்தான். நமது தற்போதய வாழ்க்கையை மறந்து, மனவெளியில் அக்கால கட்டத்திற்கு பயணித்துப் பாருங்கள் அதன் தேவையும், வலியும் புரியும். அந்த உறுப்புகளை ஒரு மாயையானவைகளாகக்கூட அவன் பார்த்தான். இன்று உள்ள அறிவியல் தெளிவு அன்று அவனிடம் இல்லையென்பதையும் சேர்த்து நினைவு கூறுங்கள். இன்றுள்ள அறிவியல் தெளிவோடு பார்த்தாலும் இது ஒரு மாயையான விடயம் தானே.

இனப்பெருக்கத் தேவை எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை மனிதனின் மலைவாழ் காலத்திற்கு வெகுகாலத்திற்கு பிறகுகூட ' பழய ஏற்பாடு' பைபிள் காலத்தில் இருந்த நிலையை ம. செந்தமிழன் தனது ' நிலம், பெண்ணுடல் நிறுவனமயம்' (பண்மைவெளி வெளியீட்டகம்) என்ற நூலில் வேரொறு விடயமாக எடுத்துக்காட்டியுள்ளார். இங்கே இரண்டு பெண்களும் அவர்களது தகப்பன் மட்டும் இருப்பர். அந்த பெண்களில் ஒருத்தி மற்றவளிடம் இயம்புவாள். நம் இனத்தைப்பெருக்க நம் அப்பனைத்தவிர இங்கு வேறு ஆண்மகன் யாரும் இலர். எனவே, நம் தகப்பனுக்கு மது கொடுத்து விட்டு நாம் அவனோடு படுத்துக்கொள்வோம் என்று. ஆக, மலைவாழ் காலத்தில் இனப்பெருக்க தேவையின் வீச்சு எத்தகையதாக இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்ப்பது எளிது. இவைகளை வைத்துப் பார்க்கும் போது லிங்க வழிபாடு தோன்றியதன் தேவையைப் புரிந்து கொள்ளலாம்.

லிங்க வழிபாடு தோன்றியதின் தேவையின் மூலத்தையும், அது தோன்றியது ஆதி காலமென்றும், அது தோன்றிய இடம் மலை என்றும் கண்டோம். தற்கால சிவனும் ஒரு மலைவாழ் தெய்வம். ( இப்போது இமயமலையிலே வைக்கப்பெற்றாலும் அது முதன்முதலில் தோண்றிய இடம் தற்போது நீரில் மூழ்கியுள்ள குமரிக்கண்ட பொதிகை மலையே.) முதல் மாந்தன் வாழ்ந்த இடம் மலை. சிவன் வாழ்விடமும், மரபுவழியாக, மலையே.

'தென்னாடுடைய சிவனே போற்றி - என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்ற மறபுவழி போற்றலின்படியும், இது பழந்தமிழரால் வழிபட்ட வடிவம். இதன் வழி, தமிழரே உலகின் மூத்த குடியென்று உறுதியாக நிறுவலாம். தமிழரே உலகின் மூத்த குடியென்பது உறுதியாக முன்பே நிறுவப்பட்ட தென்றாலும், இந்தச் சான்றும் அதற்கு அரண் சேர்க்கிறது.

(இத்தகைய வழிபடு தெய்வம் உலகில் வேறெந்த குடிக்கும் இல்லையென்பது தெரிந்ததே. இன்று இந்திய நிலப்பரப்பெங்கும் பரவியுள்ள இவ்வழிபடுபொருள், அன்று இந்தியாவெங்கும் பரவியிருந்த தமிழரின் வழிவந்ததே. இந்திய சிவன் கோயில்களில் 90 சதவீதம் தமிழ் நாட்டில் மட்டுமே உள்ளது. 1500 ஆண்டுகளுக்கு முன்பும் கர்நாடகம், தமிழ் பேசிய பகுதிதான். அங்குள்ள லிங்காயத்து சமூகத்தினரும் தமிழினத்தைச் சேர்ந்தவரே! கருநாடகம் என்பதே, 'மேடான நாடு' என்று பொருள்படும் தமிழ்ப் பெயர் தான். காளிக் கோட்டம் -> காளிக் கோட்டா -> கல்கத்தா என்பதும் தமிழ்ப் பெயர்தான். இந்தியாவின் தமிழ்ப் பூர்வீகத்திற்கான சான்றுகள் ஏராளம், ஏராளம். இப்போதைக்கு இந்த சான்றுகள் போதும் என்று மேல் செல்வோம்.)

லிங்கம் என்ற பெயர் எப்போது ஏற்பட்டதென்பது தெரியவில்லை. ஆனால், சிவம் என்பது மட்டும் முதலில் தோன்றிய பெயர் எனத்துணிய இடமுண்டு. இனப்பெருக்கத்தோடு உடன்பட்ட இன்னொன்று, பெண்களின் பூப்புக்குருதி. குருதியின் நிறம் சிவப்பு. இதனடிப்படையில் லிங்கத்திற்கு முதலில் பெயர் வைத்தவன் குருதியின் நிறத்தை வைத்து 'சிவம்' என்று அழைத்திருக்கலாம். (கடலின் நிறத்தை வைத்து நீரை, நீலு என்று அழைத்தது போல.) பிற்காலத்தில், நாளடைவில் சிவம் குறித்த சிவந்த நிறத்தை நெருப்போடு தொடர்பு படுத்தியிருக்கலாம். பழங்காலத்தில் நெருப்பால் ஆக்கத்தை விட அழிவே மிகையாயிருந்திருக்க வேண்டும். மிக அடர்ந்த மலைக்காடுகளில் மரங்களின் உராய்வுகளால் அடிக்கடி தீப்பிடித்து பெரும் சேதங்கள் ஏற்படுவது தொடர்கதையாயிருந்திருக்க வேண்டும். எனவே, காலப்போக்கில் சிவம் அழிவுக்கடவுளாகக் கருதப்பட்டிருக்கலாம். அல்லது, பார்ப்பனர்கள் இதே கருத்தாக்கத்தின் ( அதாவது சிவம் -> சிவப்பு -> நெருப்பு) அடிப்படையில் சைவத்தையும், வைணவத்தையும் இந்து மதம் என்ற புனைவுக்குள் அடைக்கும் போது சிவனுக்கு அழிவுத்துறையை ஒதுக்கியும் இருக்கலாம்.

இதிலே இனொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். 'அன்பே சிவம்' என்ற போற்றுதல். பொதுவாக இறை என்பது அன்பு வடிவமானதென்றாலும், சிவத்திற்குத்தான் அது இயல்பான சொல். காதலன்பில்தானே இனப்பெருக்கம் நிகழ்கின்றது? ஆண்-பெண் காதலன்பைக் குறிப்பது தானே சிவலிங்கம். அது பொதுமைப்படுத்தப்பட்டு அனைத்து அன்பின் அடையாளமாக குறிக்கப்படுகின்றது. சிவலிங்கத்தைத்தான் தற்காலத்தில் Arrow & Clover ஆக, காதலன்பைக் குறிக்க சற்று வித்தியாசமாக பயன்படுத்துவது எண்ணத்தக்கது. இங்கும் Clover சிவப்பாக வரையப்படுவதை நோக்குக! (Clover என்பது பெண்ணுறுப்பைப் போன்ற இலை உருவம் கொண்ட செடி. Heart & Arrow என்பது அவையடக்கச் சொல். )

மேற்கண்ட இந்தக் கட்டுரை 'புகழ்ச்செல்வி' என்ற சிற்றிதழில் வெளிவந்து, பரவலான வரவேற்பைப் பெற்றது. சிவம் என்ற பெயருக்கான மூலத்தை ஊகித்த நான், லிங்கம் என்ற பெயர் எப்போது ஏற்பட்டது என்று தெரியவில்லை என்று எழுதியிருந்தேன். கட்டுரையைப் படித்த ஒர் ஆய்வாளர் என்னைத் தொடர்பு கொண்டு கீழ்வருமாறு விளக்கம் சொன்னார்.

"அந்தக் காலத்திலே வீர மரணம் எய்துபவர்களுக்கு நடுகல் நட்டு வழிபடுவார்கள். நடுகல்லுக்கு அக்காலப் பெயர் 'ஆலங்கம்' என்பது. சிவலிங்கம் நடுகல்லைப் போன்ற தோற்றம் கொண்டுள்ளதால், ஆலங்கம் என்று அழைக்கப்பட்டு, அது மறுவித்தான் லிங்கம் என்றானது."

மேற்கூறிய அவரது விளக்கத்திற்குப் பிறகு நமக்கு விளங்குவது என்னவென்றால், 'சிவம்' என்பது பெண்ணுறுப்பின் அடிப்படையில் தோன்றிய பகுதிப் பெயர்தான். அதேபோல, ஆணுறுப்பின் அடிப்படையிலான பகுதிப் பெயர் 'ஆலங்கம்' என்பது. ஆனால், இந்த உருவத்தின், (ஆண்-பெண் இனப்பெருக்க உறுப்புகளின் தொகை வடிவத்தின்), தொகைப்பெயர் ஒன்று தேவை. ஆக, இவ்வுருவத்தின் தொகைப்பெயர் (சிவம் + ஆலங்கம்) -> சிவாலங்கம். இது மருவித்தான் 'சிவலிங்கம்' என்ற பெயர் தோன்றியது என்பது திண்ணம்.

பிரதோஷ விரத மகிமை

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.வறுமை நீங்கி செல்வம் பெருகும்.
நோய்கள் நீங்கும்.எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும், இருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக பிரதோஷம் வரும்.பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையாகும்.
பிரதோஷம் பிறந்த கதை!


தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி சண்டை நடந்து கொண்டு இருந்தது. இதில் இரு தரப்பிலும் பலர் இறந்தனர். ஆனால் அசுரர் தரப்பில் இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெற்று வந்தனர். இதற்குக் காரணம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இவர்களுக்கு உபதேசம் செய்த மந்திரத்தால் அவர்கள் மீண்டும் உயிர் பெற்றனர்.


இதே போல் மரணமில்லா வாழ்வு பெற விரும்பிய தேவர்கள். பிரம்மனை நாடினர். அவர் அவர்களைத் திருமாலிடம் அழைத்து சென்றார். திருமால், "திருப்பாற் கடலைக் கடைந்து அதில் கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மரணமின்றி என்றும் இளமையுடன் வாழலாம் என்றார்.'' மேலும் அவர், "தேவர்களாகிய நீங்கள் மிகவும் பலம் குன்றியிருக்கிறீர்கள்.


எனவே உங்களால் மட்டும் பாற்கடலை கடைய முடியாது. எனவே அசுரர்களை உதவிக்கு அழையுங்கள். அவர்களுக்கு அமிர்தத்தில் பங்கு தருவதாகக் கூறி அழைத்தால் வருவார்கள்'' என்று கூறினார்.
அவ்வாறே தேவர்களும், அசுரர்களை அழைத்தனர் அசுரர்களும் சாகாத்தன்மை பெற்ற அந்த அற்புத அமிர்தம் தேவர்களின் கைக்குக் கிடைத்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன், அமிர்தம் கிடைத்தவுடன் தாங்களே அதைத் தட்டிச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒப்புக் கொண்டனர்.


ஒரு தசமித் திதியில், "மந்திரகிரி'' மலையை மத்தாகவும், "வாசுகி'' என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் சேர்ந்து கடைய தொடங்கினார்கள். அப்போது தங்களுக்கு அதிகப்பலம் உள்ளது என்ற ஆணவத்தால், தேவர்கள் சுட்டிக்காட்டிய வால்பகுதியை அரக்கர்கள் பிடித்துக் கொள்ளாமல், தங்கள் கவுரவத்துக்குப் பாம்பின் தலைப் பாகமே ஏற்றது என்றனர்.
அசுரர்கள் தலையைப் பிடித்துக் கொள்ள தேவர்கள் வாலை பிடித்துக் கொள்ள இருவரும் சேர்ந்து கடைய ஆரம்பித்தனர். அப்போது தக்க பிடிமானம் இல்லாததால் "மந்திரகிரி'' மலை நிலை குலைந்து, பாற்கடலுக்கடியே மூழ்க ஆரம்பித்தது! உடனே திருமால் ஆமை வடிவம் எடுத்து, (கூர்ம அவதாரம்) மலையின் கீழே சென்று அதனைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டார்.


இதனால் மந்திரகிரிமலை கடைவதற்கு ஏற்ற நிலைக்குத் தயாரானது. இவர்கள் பாற்கடலைக் கடைந்தது தசமி திதி என்பதால் ஒருவேளையுண்டு, மிக உற்சாகத்துடன் கடைந்தனர். மறுநாள் விரத தினம் ஏகாதசி என்பதால் எல்லோரும் உணவு எதுவும் உண்ணாமல் உபவாசம் இருந்து கடைந்தார்கள்.
இதனால் நேரம் ஆக, ஆக எல்லோருக்கும் பசியோடு, களைப்பும் சேர்ந்து கொண்டது. மேலும் அந்த நேரம் வாசுகி பாம்பானது வலி பொறுக்க முடியாமல், பெருமூச்சுவிட, அந்த மூச்சின் விஷத்தன்மையினைத் தாங்க முடியாமல் அசுரர்கள் தவித்தார்கள். அந்த நேரம் பார்த்து திடீரென்று சுனாமி வந்தது போல் கொந்தளிக்கத் தொடங்கியது.


வெண்மையான அதன் நிறம் கறுப்பாக மாறத் தொடங்கியது. திடீரென்று கடலின் நடுவே புகையைக் கக்கியபடி பந்துபோல் எழுந்தது. அதே சமயத்தில் வாசுகி பாம்பானது பயத்தில் தன் பங்கிற்கு விஷத்தைக் கக்கியது! கடலில் தோன்றிய ஆலமும், வாசுகி பாம்பு கலக்கிய ஆலமும் ஒன்று சேர்ந்து "ஆலாலம் விஷம்'' என்ற பெயர் பெற்றது.


இந்தக் கொடிய விஷத்தின் வெப்பத்தால், அண்ட சராசரமே பாதிக்கப்பட்டது. வெண்ணிறமாக இருந்த விஷ்ணுபகவான் இந்த விஷத்தின் வேகத்தால் நீலநிறம் ஆனார். இந்தக் கொடிய ஆலகால விஷமானது அசுரர்களையும், தேவர்களையும் சூழ அவர்கள் சிவபெருமானை நாடி ஓடினார்கள்.
அவர்கள் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை அடைய வலப்பக்கம் செல்லலாம் என்றால் அங்கேயும் கருப்பு விஷப்புகை சூழ்ந்து வந்தது. இதனால் அவர்கள் சிவபெருமானைத் தரிசிக்க இடப்பக்கமாக ஓடினார்கள். இடப்பக்கமும் விஷப்புகை சூழ்ந்து வந்தது.


எனவே அவர்கள் செய்வதறியாது மீண்டும் வலப்பக்கமும், இடப்பக்கமும் ஓடினார்கள். கோமுகம் வழியாகவும் கண்டு தரிசிக்க முயற்சித்தனர். அவ்வப்போது இறைவன் சந்நிதானம் இருக்கும் நேர் எதிரிலும் ஓடினார்கள். இதனால் எந்தப் பயனும் கிட்டாத இவர்கள் நந்திதேவரைச் சரண் அடைந்து தாங்கள் ஈசனுடைய தரிசனம் பெற உதவும்படிக் கேட்டுக் கொண்டனர்.


நந்திதேவருடைய உதவியினால், சிவதரிசனம் கிடைத்தது. இதனால் தான் "பிரதோஷ'' வழிபாட்டின் போது நந்திதேவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது! பிரதோஷத்தின் போது முதலில் நந்திதேவருக்குப் பூஜை முடித்தபிறகே, ஈஸ்வரனுக்கு பூஜை நடத்தப்படுகிறது.


மற்றும் ஆலகால விஷம் துரத்திய போது இவர்கள் ஈசனை வழிபட மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில்தான் பிரதோஷ காலத்தில் மட்டும், செய்யப்படும், "சோம சூத்ரபிரதட்சணம்'' செய்யப்படுகிறது! இதன்பின் ஈசனிடம் தஞ்சம் புகுந்த தேவர்கள், தங்களை "ஆலாலம்'' விஷத்தில் இருந்து காக்கும்படி வேண்டிட, சிவபெருமான், தம் அருகிலிருந்த சுந்தரனாரை அழைத்து, அந்த விஷத்தை இவ்விடத்துக்குக் கொண்டுவரும்படிப் பணித்தார்.


அதன்படியே சுந்தரரும், அணுக முடியாத அந்த அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத் திரட்டி உருட்டிக் கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். ஈஸ்வரனும் அந்தக் கொடிய விஷத்தை அடியவர்களான தேவர்களைக் காக்கும் பொருட்டு, அதனை அமுதம் போல் உண்டருளினார்.
இதனைப் பார்த்த ஈஸ்வரி அந்த விஷமானது உள்ளே செல்லாதபடி ஈசனின் கழுத்தை பிடித்து, இறைவனின் உள்ளிருக்கும் உயிர்கள் அழிந்து விடாமல் இருக்கவும், வெளியில் உமிழ்ந்தால், வெளியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் எனக் கருதி அவ்வாறு செய்ய, விஷமானது ஈசனுடைய தொண்டையிலேயே தங்கி அமுதமாக மாறியது.


அதே சமயம் அது தன்னிடமிருந்த விஷத்தை வெளிப்படுத்தியதால் ஈசனுடைய கழுத்து கருத்துப் போயிற்று. இதன் காரணமாகவே சிவபெருமானுக்கு, திருநீலகண்டன், நஞ்சுண்டன், நஞ்சுண்டேஸ்வரன், மணிகண்டன் என்ற பெயர்கள் ஏற்பட்டன.
ஏகாதசியன்று காலையில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதங்கள் அன்று மாலைக்குள் முடிவு பெற்றன. இதன் பிறகு சிவபெருமான் அவர்களை மீண்டும் சென்று பாற்கடலைக் கடையும்படி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் பாற்கடலைக் கடைந்த போது முதலில் லெட்சுமி தோன்றினார். அதனை விஷ்ணு ஏற்றுக் கொண்டார்.


அடுத்து காமதேனு தோன்றியது. அதனை தேவர்களின் தலைவனான இந்திரன் பெற்றுக் கொண்டான்! இதன் பிறகு தொடர்ந்து பாற்கடலில் ஐராவதம், கற்பகவிருட்சம், சிந்தாமணி, சூடாமணி, உச்சை சரவம் என்ற குதிரை ஆகியன வெளிப்பட்டன. இவைகள் யாவற்றையும் தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
ஏகாதசியன்று இரவு முழுவதும் தூங்காமல், பாற்கடலைக் கடைவதில் எல்லாரும் முனைந்திருந்தனர். மறுநாள் காலை துவாதசியன்று அதிகாலை வேளையில் பாற்கடலிலிருந்து அமிர்தம் தோன்றியது. அந்த அமிர்தத்தை உண்ணவேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் போட்டியிட்டனர். திருமால் அங்கும் புகுந்து ஒரு தந்திரம் செய்து அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் செய்தார்.


பின்பு அமிர்தத்தை உண்ட தேவர்கள் புதிய வலிமையும், பொலிவும் பெற்றனர். அவர்களை எதிர்க்க முடியாத அசுரர்கள் ஓடி ஒளிந்தனர். அமிர்தம் உண்ட மகிழ்ச்சி, அசுரரை வென்ற களிப்பு ஆகியவற்றால் தேவர்களுக்குப் போதை ஏற்றியது. எனவே அவர்கள் அமிர்தம் பெறக் காரணமாக இருந்த பரமேஸ்வரனை அன்று முழுவதும் மறந்திருந்தார்கள்.


மறுநாள் "திரயோதசி'' அன்று அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து வெட்கம் மேலிட்டு உடனடியாகத் தங்கள் செய்கைக்கு வருத்தம் தெரிவித்து ஈஸ்வரனிடம் மன்னிப்பை வேண்டினர். ஈசனும் அவர்கள் செய்த தவறை மன்னித்தார். அவர்களுடைய மகிழ்ச்சியின் பொருட்டு, நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே ஈசன் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்!
இதன் காரணமாகத்தான் பிரதோஷ தினத்தன்று நந்திதேவருடைய இரண்டு கொம்புகளுக்கு இடையில் இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஐதீகம் ஏற்பட்டது. இவ்விதம் நந்திபகவானைக் குனிந்து வணங்குவதை, இப்பெருமானின் காதில் ஏதோ ரகசியம் பேசுவதாகக் கருதி கொண்டு இப்பழக்கம் தொடர்ந்து வருகிறது!


இது ரிஷபப் பெருமானின் காதுகளில் ரகசியம் பேசுவதல்ல, இரு கொம்புகளின் இடையே ஈசனைக் கண்டு வணங்குவதாகும்! பிரதோஷ வேளையில் நந்திபகவானின் இரண்டு கொம்புகளின் நடுப்பகுதியை "சிவாயநம'' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறி வணங்கிட நமது வறுமை, கடன், நோய், மரண பயம் எல்லாம் நீங்கி அனைத்து செல்வங்களும் கிட்டும்.


மேலும் சிவபெருமானின் தரிசனத்திற்குச் செல்பவர்கள் முதலில் நந்திபகவானை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். நந்தி பகவானின் அனுமதிபெற்றுச் சிவபெருமானை அவருடைய கொம்புகளுக்கிடையேயுள்ள வழியாகப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.
பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு ஆராதனையானவுடன், நந்திபகவானுக்கு ஆராதனை நடைபெறும். அதன்பிறகு தான் உற்சவர் கோவிலை வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.
பிரதோஷ வகைகள்


நித்திய பிரதோஷம் - தினமும் பிரதோஷ நேரத்தில் அதாவது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவனை வணங்குவது.


பட்சப் பிரதோஷம் - சுக்லபட்ச சதுர்த்தி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.


மாதப் பிரதோஷம் - கிருஷ்ண பட்ச திரயோதசி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.


மகா பிரதோஷம் - சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும்.
பிரளய பிரதோஷம் - உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.


பிரதோஷ பூஜை அபிஷேகத்திற்கான பொருள்களும் பலன்களும்
மலர்கள் - தெய்வ தரிசனம் கிடைக்கும்
பழங்கள் - விளைச்சல் பெருகும்
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
தேன் - இனிய சாரீரம் கிடைக்கும்
பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
எண்ணெய் – சுகவாழ்வு கிடைக்கும்
இளநீர் - நல்ல மக்கட் பேறு கிடைக்கும்
பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர் - பல வளமும் உண்டாகும்
நெய் - முக்தி பேறு கிடைக்கும்
பிரதோஷ காலத்தில் வலம் வரும் முறை


அதாவது, சிவாலயத்தில் நந்தியம்பெருமானிடமிருந்து புறப்பட்டு இடப்புறம் சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி, வந்த வழியே திரும்பி, நந்திதேவரை வணங்கி, வலப்புறமாக கோமுகி வரை சென்று மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமானை வணங்க வேண்டும். இம்முறைக்கு சோம சூட்ச பிரதட்சணம் என்று பெயர்.விரதமிருப்போர் மேற்படி பிரதட்சனத்தை பின்பற்றலாம்.ஆனால் பூஜை நேரங்களில் வழிபடுவோரை இடையூறு செய்யும் வகையிலோ, பூஜை, உற்சவங்களை புறக்கணித்தோ இவ்வாறு வழிபாடு செய்யலாகாது.

சாய்பாபா சர்வசக்தி

சாய்பாபா சர்வசக்தி வாய்ந்தவர். பஞ்ச பூதங்களும் அவர் காலடி சுண்டு விரலில் கட்டுப்பட்டுக் கிடந்தன. அவர் பார்த்த பார்வையிலேயே பலரும் பரிசுத்தம் ஆனார்கள். அவர் எல்லை இல்லா ஆற்றல் பெற்றவர். அப்படிப்பட்டவர் ஒரு சாதாரண விஷயத்தில் தோல்வி அடைய நேரிட்டது. சாய்பாபா மீண்டும் சீரடிக்கு வந்து, நிறைய பேரை தன் அருள்பார்வைக்குள் கொண்டு வந்து கொண்டிருந்த காலக் கட்டத்தில் அவர் வாலிபப் பருவத்தின் உச்சத்தில் இருந்தார். நல்ல முறுக்கேறிய உடல் கட்டுடன், ஒரு விளையாட்டு வீரனைப் போல திகழ்ந்தார். நீண்ட தலைமுடி வளர்த்திருந்த பாபா, அக்காலக்கட்டத்தில் பக்சீர்கள் அணியும் சல்லடைத் துணியை அணிந்து வந்தார். மல்யுத்தம் தெரிந்தவர்களும், மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்பவர்களும் அத்தகைய சல்லடைத் துணியையே அணிந்து வந்தனர்.

பாபா அத்தகைய சல்லடைத் துணியை அணிவது சீரடியில் உள்ள மல்யுத்த வீரனான மொஹித்தீன் தாம்போலி என்பவனுக்குப் பிடிக்கவில்லை. சீரடியில் வெற்றிலைப் பாக்கு கடை வைத்திருந்த அவன் ஊரில் தான் மட்டுமே மல்யுத்த சாம்பியனாக, ஊரே போற்றும் வகையில் திகழ வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வந்தான். எனவே அவனுக்கு சாய்பாபா மல்யுத்த வீரன் போல சல்லடைத் துணி அணிவது பிடிக்கவில்லை. ஒருநாள் திடீரென அவன் பாபாவிடம் வந்தான். வந்த வேகத்தில் பாபாவிடம் ஆவேசமாக பேசத் தொடங்கினான். “நீ சாதுவா அல்லது மல்யுத்த வீரனா? சாது என்று சொல்லிக் கொள்ளும் நீ அதற்கேற்ப உடை அணிவதில்லை. என்னைப் போல மல்யுத்த வீரன் மாதிரி உடை அணிகிறாய். இந்த வேஷத்தை கலைத்து விடு.

இல்லையெனில் என்னோடு மல்யுத்தம் செய்வதற்கு வா. என்னை ஜெயித்து விட்டு, உன் இஷ்டப்படி ஆடை அணிந்து கொள்” என்றான். அவன் பேச்சில் அகங்காரம் தெரிந்தது. ஆனால் பாபா அவன் மீது கோபம் கொள்ளவில்லை. அதற்கு மாறாக அவனை சமரசம் செய்யும் வகையில் பேசினார். “நான் சிறு வயதில் முஸ்லிம் பக்கீர் ஒருவரால் வளர்க்கப்பட்டேன். அதனால்தான் எனக்கு இத்தகைய உடை அணியும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி நான் யாருக்கும் சவால் விடும் வகையில் இந்த உடையை அணியவில்லை” என்றார். அவர் விளக்கத்தை மல்யுத்த வீரன் மொஹித்தீன் தாம்போலி ஏற்கவில்லை. அவன் பாபாவை பிடித்து கீழே தள்ளி விட்டான். சுற்றி நின்றவர்கள் பாபாவை தாங்கிப் பிடித்துக் கொண்டனர். பாபாவுக்கும் அந்த மல்யுத்த வீரனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதற்கிடையே பாபாவுடன் மல்யுத்த வீரன் மோத போகும் தகவல் பரவி, அங்கு கிராம மக்கள் அனைவரும் திரண்டு விட்டனர்.

பாபா.... அந்த மல்யுத்த வீரனைப் பார்த்தார். அவனிடம், “இன்று நீ விரும்பியதை நான் தர வேண்டும். யாருக்கும் இல்லை என்று ஒரு போதும் என்னால் சொல்ல இயலாது. என் உடல் சக்திக்கு ஏற்ப அனுசரித்து உன்னுடன் போர் புரிகிறேன் என்றார். பாபா மல்யுத்தம் செய்ய தயார் என்று சொன்னதை கேட்டதும் சீரடி ஊர் மக்களுக்கு கடும் ஆச்சரியம் ஏற்பட்டது. பாபா உக்கிரமாக ஒரு பார்வை பார்த்தாலே மல்யுத்த வீரனை சுருண்டு விழ வைத்து விடும் ஆற்றல் கொண்டவர். அவர் எப்படி இவனிடம் சண்டை போட வருகிறேன் என சொன்னார் என்று ஆச்சரியப்பட்டனர். மல்யுத்தம் தொடங்கியது. முரடனான மொஹித்தீன் தாம்போலி வேண்டும் என்றே பாபா மீது அசுரத்தனமாக தாக்குதல்களைத் தொடுத்தான். சற்று நேரமே அந்த மல்யுத்தம் நீடித்தது. மொஹித்தீனுக்கு வெற்றியை வழங்கி விட்டு பாபா தோல்வியை ஏற்றுக் கொண்டார்.

பாபா தோற்று விட்டார் என்றதும் சீரடி மக்களில் பெரும்பாலானவர்கள் கவலையில் ஆழ்ந்தனர். சிலர் வேதனையில் கண்ணீர் விட்டனர். ஆனால் சாய்பாபா கவலைப்படவில்லை. வேதனைப்படவுமில்லை. மாறாக புன்னகைத்தார். அப்போதே, அந்த வினாடியே அவர் ஒரு முடிவு எடுத்தார். “இந்த சல்லடைத் துணி துறவிகளுக்கு ஏற்றது அல்ல. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறினார். பிறகு தான் அணிந்திருந்த சல்லடைத் துணியை முழுமையாக கழற்றி வீசினார். வெள்ளை உடையை கொண்டு வரச் சொன்னார். நீண்ட அங்கியான கஃப்னி எனும் வகை உடையை வாங்கி அணிந்து கொண்டார். ஒரு துண்டு துணியை தலையைச் சுற்றி முக்காடிட்டு கட்டிக் கொண்டார். இதனால் பாபாவின் தோற்றமே மாறிப் போனது. இதைக் கண்டதும் மல்யுத்த வீரன் மொஹித்தின் தாம்போலி அளவற்ற ஆனந்தம் கொண்டான். பாபாவை வீழ்த்தி விட்டோம் என்ற மமதை அவன் மனதில் தோன்றி இருந்தது.

பாபா அதை அறிந்திருந்தாலும் அவனிடம் துளி அளவு கூட வெறுப்பைக் காட்டவில்லை. மாறாக மொஹித்தீனுக்கு நிறைய ஆசி கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தார். இதை கண்டதும் பாபா மீது மிகுந்த பற்று வைத்திருந்த சீரடி மக்கள் ஆதங்கப்பட்டனர். “பாபா.... நீங்கள் அவனுக்கு ஆசி வழங்குகிறீர்கள். ஆனால் அவன் எவ்வளவு கர்வத்தோடு போகிறான் பாருங்கள்” என்றனர். அதற்கு பாபா, “கவலைப்படாதீர்கள். இன்று என்னோடு மல்யுத்த போர் செய்ய வந்தவன் விரைவில் என் பணியாளர்களில் ஒருவனாக மாறப் போகிறான்” என்றார். பாபா சொன்னது போலவே, மல்யுத்த வீரன் மொஹித்தீன் தாம்போலி அடுத்த சில மாதங்களில் பாபாவின் பணியாளனாக மாறினான். அவனுக்கு பாபாவின் உடைகளை துவைத்து சுத்தம் செய்யும் பணி கொடுக்கப்பட்டது. பாபாவின் உடையை மாற்ற மற்போர் புரிந்த அவன், கடைசியில் அந்த உடையை சுத்தம் செய்து கொடுக்கும் பணிக்கே வந்தது பாபாவின் அருளாக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

இந்த மல்யுத்த சண்டை சம்பவத்துக்குப் பிறகு சாய்பாபாவின் நடை, உடை, பழக்க - வழக்கங்கள் அனைத்திலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. காலணி அணிவதை கைவிட்டார். கிழிந்த கந்தல் துணிகளை அணிவதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் இரு சாக்குத் துணி வைத்திருந்தார். ஒரு சாக்குத் துணியை தான் அமர்வதற்கு பயன்படுத்திக் கொண்டார். மற்றொரு சாக்குத் துணியை படுப்பதற்கு வைத்துக் கொண்டார். இத்தகைய வாழ்க்கையை தொடங்கிய பிறகு அவர் தன்னை நாடி வரும் பக்தர்களிடம், “இறைமையை விட ஏழ்மைதான் உயர்ந்தது. ஆட்சி அதிகாரங்களில் இருப்பதை விட ஏழையாக இருப்பதுதான் உன்னதம்” என்றார்.

உண்மையான துறவிகள் தங்களுடைய உணவு, உடை, உறைவிடம் பற்றித் தனிக் கவனம் செலுத்துவது இல்லை. கிடைத்ததை உண்டு கிழிசலும் உடுத்தி, நினைத்த இடத்தில் உறங்கிக் கொள்வார்கள் என்று சொல்வதுண்டு. அந்த நிலைக்கு பாபா முழுமையாக மாறி இருந்தார். பாபா தன் உடையை மாற்றிக் கொண்டது போல உள்ளத்தையும் மாற்றிக் கொண்டார். அவரிடம் காணப்பட்ட கோலம் காணாமலே போய் விட்டது. அவரது கண்கள் அபாரமான கருணை மழை பொழியும் கண்களாக மாறியது. அவர் முகத்தில் மிகுந்த களை உண்டாகி அலாதியானப் பொலிவைப் பெற்றது. மொத்தத்தில் அவர் மனம் அமைதி கொண்டது. எல்லையற்ற சாந்தம் அவரை ஆக்கிரமித்தது. எப்போதும் தியானத்தில் அமர்ந்தவராக பாபா மாறினார்.

அவருக்குள் புகுந்த அமைதி அவரது மனோநிலையை முழுமையாக மாற்றியது. பகல் நேரங்களில் மசூதியில் இருந்து ஆலமரத்தடிக்கு வரும் அவர் மற்றவர்களிடம் பேசுவதை குறைத்தார். யாராவது கேள்வி கேட்டால் மட்டுமே பதில் சொன்னார். மற்ற நேரங்களில் அவர் பார்வை விண்ணைப் பார்த்தபடி இருந்தது. அவர் வாய், “நானே அல்லா, நானே ஈஸ்வரன்” என்று சொல்லியபடி இருந்தது. இரவில் துவாரகமாயி மசூதிக்கு திரும்பும் பாபா, அங்கும் யாரிடமும் பேச மாட்டார். அமைதிக்குள் அவர் தன்னை புதைத்துக் கொண்டார். மற்றொரு வகையில் சொல்லப் போனால், பாபா இந்த இடத்தில் இருந்தாலும் ஆனந்தமான ஏகாந்தத்தை அனுபவித்தார். மாலை நேரத்தில் சீரடி அருகில் உள்ள கிராமங்கள் வரை நடந்தே சென்று விட்டு வருவார். நாளடைவில் அவர் வாழ்க்கை முறைகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட தொடங்கியது. சில நாள் குளிப்பார்.

சில நாள் குளிக்க மாட்டார். சில சமயம் ஒரு வாரம் வரை கூட குளிக்காமல் இருப்பார். என்றாலும் தினமும் இந்துக்களும் முஸ்லிம்களும் போட்டி போட்டுக் கொண்டு பாபாவை தரிசனம் செய்ய தவறவில்லை. அவர்களை பாபா அவர்கள் இஷ்டத்துக்கே விட்டு விட்டார். பாபா புகழ் சீரடியைத் தாண்டி பரவியது. தினமும் ஏராளமானவர்கள் பாபாவை தேடி வந்தனர். அவர்கள் பாபாவுக்கு பணத்தை அள்ளி அள்ளி கொடுத்தனர். பாபா அதை வைத்து பெரிய சொத்து எதுவும் சேர்த்து விடவில்லை. துவாரகமாயி மசூதிக்குள் அவர் வைத்திருந்த புகை பிடிக்கும் மண் குழாய், கொஞ்சம் புகையிலை, ஒரு தகர டப்பா, கஃப்னி உடை, கஃபனி வகை நீண்ட அங்கி, சட்கா என்றழைக்கப்பட்ட சிறு கைத்தடி ஆகியவையே அவரது உடமைகளாக இருந்தன. பாபாவின் உடை, உள்ளம் மாறியதைத் தொடர்ந்து அவரது தினசரி வாழ்வியல் நடைமுறைகளிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. அந்த மாற்றத்தின்படி சீரடி சாய்பாபாவின் தினசரி வாழ்க்கை, பக்தர்களுக்கு வியப்பூட்டும் வகையில் இருந்தது.

திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம்.காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார்.

பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் 'தென்திசை இலங்கை நோக்கி' பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.

இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உள்ள கடவுள்களை வணங்கினால் நினைப்பது எல்லாம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை

ஆடிக்கிருத்திகை

தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமானுக்கு செந்தில்வேலன், தண்டாயுதபாணி, சுப்ரமணி, சண்முகம், ஆறுமுகம், அழகர், குமரன் உள்பட பல பெயர்களில் பக்தர்கள் அழைக்கிறார்கள். ஆண்டுதோறும் ஆடி மாதம் வரும் பரணி நட்சத்திரத்தில் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முருகபெருமானுக்கு வேண்டுதல் நிறைவேற்ற பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள். பூகாவடி, தேர்காவடி உள்பட பல நேர்த்தி கடன்கள் செலுத்துவது வழக்கம். அதன்படி இவ்வாண்டு ஆடிக்கிருத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது. முன்னொரு காலத்தில் அகஸ்திய மாமுனி இமயமலைச் சாரலில் சிவகிரி, சக்திகிரி என்ற இரு மலைகளை பூஜித்து பொதிகை மலைக்கு புறப்படும் போது இரு மலைகளையும் எடுத்துக் கொண்டு கேதாரமலை வரை கொண்டு வந்து அங்கே இளைப்பாறினார். அதன்பின் அம்மலையை தூக்க அவரால் முடியவில்லை. அப்பொழுது அவர் முன் சூரப்பத்மனின் நண்பன் இடும்பாசூரன் வந்து, நானும் சூரப்பத்மனைப்போல அழியாப்புகழ் பெற வேண்டி முருகப்பெருமானை நோக்கி தவமிருக்கின்றேன்.

முருகனின் அருள் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறினான். அதற்கு அகத்தியர் இவ்விருமலை சிவ சக்தியாகும். முருகனின் தாய், தந்தை அம்சமான இம்மலையை நீ காவடிபோல் தூக்கி பொதிகைமலை வரை கொண்டு வந்தால் முருகனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்று சொல்லி மலையை எளிதில் தூக்கி வரும் மந்திரமான அரோகரா! அரோகரா! என்று சொல்லிக் கொடுத்து தூக்கிவரப் பணித்தார். இவ்வாறு இடும்பாசூரன் காவடிபோல் மலைகளை தூக்கி வரும்போது வரும் வழியில் திருவாவினன்குடியில் வைத்து சற்று இளைப்பாறினான். மீண்டும் எடுக்க முயற்சித்த போது எடுக்க முடியவில்லை. அப்பொழுது அங்கே ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்திருந்த வேலன், இடும்பனை பார்த்து பலசாலியாக இருக்கிறாய், இதை தூக்க முடியவில்லையா என்று கேலி செய்தார். இதை கண்டு சீறிய இடும்பன் வந்திருப்பது யார் என்று அறியாமல் சினம் கொண்டு தூக்க முற்பட்டு கீழே விழுந்தான்.

அவ்வாறு விழுந்தவனை அணைத்து ஆசீர்வதித்த குமரன் கையில் வேலாகவும், வேல்முருகனாகவும் காட்சி தந்த நாள் ஆடிக்கிருத்திகை தினம் ஆகும். எனவே முருகனின் தரிசனம் கிடைத்து நீங்காப் புகழ்பெற்ற இடும்பனைப்போல் எல்லா பலனும் இந்நாளில் முருகனை பழனிமலையில் தரிசிப்போர் அடைவர் என்று அகஸ்திய மாமுனி கூறினார். எனவே முருகனை பழனிமலை சென்று வழிபடுதல் சாலச்சிறந்தது.பழனி மலை செல்ல முடியாதவர்கள் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சித்து இரு நெய் விளக்கை, அதாவது பழனி முருகனுக்கு ஒன்றும் மற்றொன்றை அங்குள்ள முருகப் பெருமானுக்குமாக ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் சகல நன்மை பெறலாம். முருகப் பெருமானின் சிறப்புகள் பெற்று இந்த ஆடிக்கிருத்திகை நாளில் மனமுருக வேண்டினால் நல்ல வேலை கிடைக்கும். விவசாயம் மேன்மையடையும். உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் மேலும் சிறப்படைவார்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கும். உடல் ஆரோக்கியம் பெருகும். நல்ல வாழ்க்கைத்துணை அமையும். மக்கட்செல்வம், பொருட்செல்வம், அருட்செல்வம் என அனைத்தும் கிடைக்கும்.

சீதை சொன்ன தருமம்



ஹனுமார் ஒரு முறை சீதா தேவியிடம் "தாயே.... தாங்கள் அசோகவனத்தில் இருந்த போது எத்தனையோ வகையில் இந்த இலங்கை அசுரர்கள் உங்களைத் துன்புறுத்தி இருப்பார்கள்.... எனக்கு ஒரு முறை ஆணை இடுங்கள்.... அவர்கள் அனைவரையும் அழித்துவிடுகிறேன்... என்றார்....

அதற்கு சீதா தேவி... "ஹனுமந்தா கோபப்படவேண்டாம்.... தனது எஜமானனின் கட்டளைக்கு இணங்கி அவர்கள் செய்தார்களே ஒழிய தங்கள் சுய விருப்பத்தின் பேரில் என்னை துன்புறுத்தவில்லை....

அரசன் கட்டளைக்கு அடிபணிய வேண்டும் என்பது பொதுவான விதி.... அரசனது கட்டளைக்கு கீழ்ப்பணிந்து நடந்தவர்களை குற்றவாளியாக நினைத்து தண்டிப்பது சரி அல்ல....' என்று சொன்னார்...